திருச்சி:தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் புதிதாக கட்டப்பட்ட விரிவுரை கூட்டரங்கின் திறப்பு விழா மற்றும் புதிய இணைப்புக் கட்டடங்களுக்கு பூமி பூஜை விழா இன்று நடந்தது. அதில் விரிவுரைக் கூட்டரங்கின் மேல்தள விரிவாக்கமானது ₹14 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இணைப்புக் கட்டடங்கள் ₹.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்ட பின்னர் கரோனா பாதிப்பு, ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியன உலக அளவில் சவாலாக இருந்தது. இந்தச் சூழலில் அதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட புதிய கல்விக்கொள்கை அந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.
தற்போதைய உலக சூழலில் மாணவர்கள் புதிய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்தைக் கட்டிலும் இருமடங்கு மக்கள் தொகை கொண்டது, தமிழ்நாடு. தமிழ் மொழி மிக அழகான மொழி. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இருந்து வந்து திருச்சி என்.ஐ.டி-யில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பேச, படிக்க, எழுத அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். அது நம் எதிர்காலத்திற்கு பெரிய உதவியாக இருக்கும்.