புதுக்கோட்டை:விராலிமலை அருகே மூளைச்சாவு அடைந்த லோடு ஆட்டோ ஓட்டுநரின் உடல் உறுப்புகள் அவரது குடும்பத்தாரின் விருப்பத்தைக் கேட்டபின், பல்வேறு மருத்துவமனைகளுக்கு உடலுறுப்பு தானமாக கொடுக்கப்பட்டது.
மேலும், மூளைச்சாவில் இறந்தவர்களின் உடலுறுப்பைத் தேவைப்படும் பல பேருக்கு தானம் செய்யலாம் எனவும், இதன் மூலம் பலபேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் எனவும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
பல பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்..!:இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு அகற்றினர். ஒரு கல்லீரல் உறுப்பு கோயம்புத்தூர் மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் திருநெல்வேலிக்கும் ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் இன்று(மே 9) காலை கொடுக்கப்பட்டது. மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே, பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று, அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.