தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளர்ச்சி கழகம் சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு "ஹாப் ஆன் ஹாப் ஆப்" என்ற ஒரு நாள் சுற்றுலா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் இன்று ஒரு நாள் மட்டும் 10 ரூபாய் கட்டணத்தில் ஒருவர் திருச்சி தமிழ்நாடு ஓட்டலில் இருந்து புறப்படும் அத்துறையின் பேருந்தில் பயணம் செய்யலாம். இந்தப் பேருந்து திருச்சியில் உள்ள வெக்காளியம்மன் கோயில், மலைக்கோட்டை, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், சமயபுரம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம் ஆகிய இடங்களுக்கு சென்று திரும்பும்.
10 ரூபாயில் ஒரு நாள் சுற்றுலா இதில் செல்லும் பயணிகள் அந்தந்த சுற்றுலாத்தலங்களில் இறங்கிக் கொள்ளலாம். அதன் பின்னர் தொடர்ந்து வரும் அடுத்த பேருந்தில் பயணம் மேற்கொண்டு அடுத்து சுற்றுலாத்தலத்தை சென்றடையலாம். இந்தத் திட்டத்தில் இன்று காலை முதல் இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. சுமார் 100 பயணிகள் வரை இதில் பயணம் செய்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சி கழக மண்டல மேலாளர் சபேசன் கூறுகையில், சுற்றுலாவை வளர்க்கும் நோக்கத்தோடு இத்திட்டம் ஏற்கனவே சென்னையில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது திருச்சியில் முதன்முறையாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளே பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதை வார விடுமுறை நாட்களிலும் தொடர்வது குறித்து அரசிடம் ஆலோசனை மேற்கொண்டு முடிவு செய்யப்படும் என்றார்.