ஸ்ரீரங்கம் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி முகூர்த்தக் கால் நடும் வைபவம் நடைபெற்றது திருச்சி: 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா வருகின்ற 19ஆம் தேதி அன்று நடைபெறுகிறது.
நாளை முதல் சித்திரை தேர்த் திருவிழா உற்சவம் தொடங்கி 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சித்திரை தேரில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக ஸ்ரீரங்கம் கோயில் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்து தேரின் மீது முகூர்த்தக்கால் நட்டனர்.
நிகழ்வின்போது ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். வருகின்ற 14ஆம் தேதி அன்று கருட சேவை வைபவமும், இதைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேர்த் திருவிழா 19ஆம் தேதி காலை நடைபெறும்.
இதையொட்டி, தேர்த் திருவிழா அன்று உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்குக் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, 5.15 மணிக்கு சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதன் பிறகு, நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளி காட்சி அளிப்பார். நம்பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்றும், ரங்கா ரங்கா என்றும் பக்தி பரவசத்துடன் முழக்கம் எழுப்பியவாறு வடம் பிடித்து தேரை இழுப்பார்கள்.
தேர் கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகிய முக்கிய வீதிகளில் வலம் வந்து, மீண்டும் காலை 10.30 மணிக்குத் தேர் நிலையை அடைந்து அங்கு தேரின் முன்புறம் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு மற்றும் சூடம் ஏற்றியும் வழிபாடு நடைபெறும்.
சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம், அன்னதானம் ஆகியவை வழங்கப்பட உள்ளன. சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் ஆகியவை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தேர்த் திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களை உடனடியாக பிரிக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும் காரணங்கள்?