திருச்சி :நாடு முழுவதும் நாளை இசுலாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தியாகத்திருநாள் என்றழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையின்போது ஆட்டு இறைச்சிகளை ஏழைகளுக்கு தானமாக இசுலாமியர்கள் வழங்குவார்கள்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக ஆடு விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. ஆடுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். அதேபோல் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும் பக்ரீத் பண்டிகை விற்பனையால் அதிக அளவில் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளில் வியாபாரிகளும், இசுலாமியர்களும் ஆடுகளை வாங்க போட்டி போடுவதால் ஆடுகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சந்தைகளில் ஒன்றான திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருக்கும் மிகவும் புகழ்பெற்ற மணப்பாறையில் ஆட்டுச்சந்தை நடைபெற்றது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்திருந்தனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை துவங்கி புதன் கிழமை பிற்பகல் வரை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க:பளு தூக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்ய வேண்டும் - தங்கப்பதக்கம் வென்ற ஆதர்ஷ் கோரிக்கை
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் அதிகளவில் விற்பனையாகும் என்பதால் தங்களது ஆடுகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என எண்ணி ஆடு வளர்ப்பவர்கள், ஆடுகளை விற்பனை செய்வதற்காக அதிகளவில் மணப்பாறை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.