திருச்சி: ஜி கார்னர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் அணியின் மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் மாநாட்டில் தொண்டர்கள் மத்தியில் நடந்துச் சென்று மேடை ஏறிய ஓபிஎஸ் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூட்டிய போலி பொதுக்குழு செல்லாது, புதிய பொதுக்குழு உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "ஆயிரம் காலத்து பயிராக, ஒன்றரை கோடி தொண்டர்களின் உயிராக அற்புத சக்தியாக விளங்குகிறது அதிமுக. வீழ்வது நாமாகினும் வளர்வது அதிமுகவாக இருக்கட்டும். கழகத்தின் தலைமைக்கு யார் வர வேண்டும் என்ற சட்டத்தினை வகுத்தவர் எம்ஜிஆர், அதனை சட்டமாக்கியவர் ஜெயலலிதா அவர்கள். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட இயக்கம், கட்சி 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட பெருமை பெற்ற ஒரே கட்சி அதிமுக தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த இயக்கத்தை ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக உருவாக்கி தந்தவர் ஜெயலலிதா என்றும், இந்தத் தொண்டர்கள் தான் இயக்கத்தின் உயிர் நாடி, ஆணிவேர். நீங்கள் தான் இயக்கத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் அதனால் தான் யார் தலைமைக்கு வர வேண்டும் என்ற தேர்வு செய்யும் உரிமையை தொண்டர்களுக்கு தந்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
கழகத்தின்(அதிமுக) நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என உண்மையான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குப் பின்னால் வந்த அரசியல் வியாபாரிகள், அரசியல் வியாபாரத்திற்காக, நயவஞ்சகர்கள், நம்பிக்கை துரோகிகள் அதனை மாற்றுகின்ற வகையில் உள்ளார்கள். ஜெயலலிதா இருமுறை முதல்வர் ஆக்கினார். மூன்றாவது முறை சின்னம்மா(சசிகலா) தான் என்னை முதலமைச்சராக ஆக்கினார்கள், திரும்ப கேட்டார்கள் நான் கொடுத்துவிட்டு வந்து விட்டேன் என்று பேசினார்.