திருச்சி: நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.10) திருச்சியில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. நாட்டை 10 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆண்டுள்ளார். எனவே, பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதிமுகவில் உள்ளவர்களும், எடப்பாடி ஆதரவில் உள்ளவர்களும் என்னிடம் பேசி வருகின்றனர். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என கூறினார்.
தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவர் என்ற கேள்விக்கு, இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். தொடர்ந்து, “சுயநலம் காரணமாக பழனிசாமி ஒன்று சேரக் கூடாது என்று கூறுகிறார். கடந்த 50 ஆண்டுகளாக, தியாக வாழ்க்கை மேற்கொண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சட்ட விதிப்படி இயக்கத்தை நடத்தியுள்ளனர். ஆனால், எடப்பாடியுடன் இருப்பவர்கள், நாங்கள் என்ன சொன்னாலும் அவர் கேட்க மறுக்கிறார் என்று மன வேதனையோடு எங்களிடம் பேசுகின்றனர்” என்று கூறினார்.