திருச்சி: நாம் தமிழர் கட்சி, மதிமுக ஆதரவாளர்களுக்கு இடையில் நடந்த தகராறு காரணமாக தொடரப்பட்ட வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜூன் 2) நீதிமன்றத்திற்கு ஆஜரானார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வைகோ மீது எனக்கு பகை இல்லை. அவர்களை நாங்கள் எதிரியாக கூட கருதவில்லை.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, ஆண்ட கட்சி உள்ளிட்ட நாட்டை நாசமாக்குபவர்கள் மட்டுமே எங்களுக்கு எதிரிகள். சவுக்கு சங்கர், மாரிதாஸ், கோபிநாத் போன்ற யூ டியூப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின், கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் என்று கூறிவிட்டு, தற்போது அதிகாரம் இருக்கிறது என்பதால் குரல்வளையை நெறிக்கிறார்கள். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டியதே ஜனநாயகம். சென்னையில் 20 நாள்களில் 18 கொலைகள் நிகழ்ந்தாலும், முதலமைச்சர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக உள்ளது எனக் கூறுகிறார்.
90 விழுக்காடு ஊடகம் கட்டுப்பாட்டில் உள்ளது. அதைத் தவிர்த்து உள்ளவர்களையும் கைது செய்வது என்பது ஏற்புடையதல்ல. நான் என் பாதையிலான பயணத்தில் தெளிவாக இருக்கிறேன்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் இலங்கை தமிழர்களுக்கான சிறப்பு முகாமை உருவாக்கியதே கருணாநிதிதான். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாமை மூடவேண்டும்.