தமிழ்நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 166 மையங்களில் நேற்று(ஜன.16) தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று (ஜன.17) திருச்சி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகளை மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு அவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் 16,600 பேருக்கு தடுப்பூசி செலுத்த தயாராக இருந்த நிலையில் 3,126 மருத்துவ பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தடுப்பூசி என்பது இலக்கு சார்ந்த திட்டம் கிடையாது. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளோம். இன்றும் மாநிலம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது.
மருத்துவ கல்வி நிறுவனங்களில் தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 111 பேரும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 100 பேரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொண்டனர். மருத்துவத் துறை சார்ந்தவன் என்ற அடிப்படையில் நான் இன்று தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.