திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி - இலங்கை இடையே தினசரி விமான சேவை தற்போது இயக்கப்பட்டு வருகிறது. என்றாலும் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக துபாய்க்கு, சென்று வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இச்சேவை ஃபிட்ஸ் விமான நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
தினசரி ஏராளமான பயணிகள் துபாய்க்கு சென்று வருகின்றனர். ஆனால் இயக்கப்படும் இரு விமானங்களில் போதிய அளவு இருக்கைகள் கிடைப்பதில்லை. எனவே, திருச்சியில் இருந்து, சென்னை வழியாகவோ அல்லது இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாகவோ துபாய்க்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு திருச்சி - இலங்கை இடையே ஃபிட்ஸ் ஏர் என்ற இந்த கூடுதல் விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.
துபாய் செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம் பயணிக்கலாம். அதேபோல துபாயில் இருந்து திருச்சி வரும் பயணிகளும் இதே வழியில் திருச்சி வந்து சேரலாம். டிசம்பர் 8-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவிருக்கிறது.
வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11:25க்கு திருச்சியை வந்தடைகிறது. மீண்டும் இங்கிருந்து 12:25க்கு புறப்பட்டு 01:25க்கு இலங்கையை சென்றடைகிறது. சனிக்கிழமை பகல் 12:45க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1:45 க்கு திருச்சி வந்தடைந்து மீண்டும் 2:45 க்கு இங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3:45க்கு இலங்கை அடைகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இலங்கையிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணிக்கு திருச்சியை வந்து அடைந்து, மீண்டும் 11:45க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12:45க்கு இலங்கையை அடைகிறது.
இதையும் படிங்க: