திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருரே மெய்யம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக குடிப்பதற்கு குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாக அலுவலர்கள் இதுவரை நடவடிக்கையும் எடுக்காகததால், ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கே கல், மரங்கள் முட்களை வைத்தும், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் தண்ணீர் குடத்துடனும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் பிரச்னை; சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள் இதையடுத்து, புத்தாநத்தம் காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வந்ததும், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி செயலர், குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் மணப்பாறை துவரங்குறிச்சி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இன்னும் மூன்று நாட்களில் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால், அலுவலர்களை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அப்பகுதியை சேர்ந்த ஊர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.