சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி திருச்சி:சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில், திருச்சி தேசிய கல்லூரியில், தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இந்த தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். குத்து விளக்கு ஏற்றி சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்த இவர், சிலம்பாட்ட வீரர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
இந்த போட்டியில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாழ் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. 85 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிலம்பம் உலக சம்மேளனத்தினால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும், காசோலைகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற சிலம்பாட்ட வீராங்கனைகளுக்கு, வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெற்காசியா மற்றும் ஆசிய சிலம்பாட்ட போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிகழ்வில் சிலம்ப உலக சம்மேளனத்தின் பொது செயலாளர் கராத்தே சங்கர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “ சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சிலம்பாட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பாட்ட கலையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்” என கூறினார். இதில் முதல் இரு இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச தெற்காசிய சிலம்பப் போட்டியில் பங்கேற்க வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. சிலம்பம் மாணவர்கள் தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கும் அயல் நாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.
இதையும் படிங்க:சிஏஜி அறிக்கை, அதானி விவகாரத்தை திசை திருப்ப பார்க்கிறார் மோடி - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு!