தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களின் சங்க ஆலோசனைக் கூட்டம் திருச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் சங்க முன்னாள் தலைவர் திரிசங்கு தலைமை வகித்தார். இதில் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் திரிசங்கு செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தம் தொடர்பாக எடுத்துள்ள புதிய முடிவு குறித்து ஆலோசிக்கப்பட்டது. தற்போது புதிய மாவட்டத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளையும் ஒரே ஒப்பந்ததாரருக்கு வழங்குவது, அந்த ஒப்பந்ததாரர் மட்டுமே அந்த பணியை ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொள்ள முடியும் என்ற பிபிஎம்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதனால் மீதமுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணிகள் வழங்கவில்லை. இந்த நடைமுறை தற்போது தஞ்சை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 693 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரே ஒப்பந்ததாரர் அமைத்து பராமரிப்பு செய்வது என அனைத்து பணிகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.