தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரலாறு காணாத வெள்ளத்திற்கு மக்களும் காரணம்.. விவசாயச் சங்கங்களில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி குற்றச்சாட்டு!

Heavy rain in southern districts: தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த வரலாறு காணாத வெள்ளத்திற்கு அரசும், மக்களும் தான் காரணம் எனத் தமிழ்நாடு விவசாயச் சங்கங்களில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி தெரிவித்துள்ளார்.

Nallusamy blamed the people and government for the unprecedented floods
தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி குற்றச்சாட்டு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 19, 2023, 8:27 PM IST

தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி குற்றச்சாட்டு

திருச்சி: தமிழ்நாடு விவசாயச் சங்கங்களில் கூட்டமைப்பின் செயலாளர் நல்லுசாமி தலைமையில் என்று திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் உள்ளிட்ட விவசாயச் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நல்லுசாமி, “தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெள்ளக் காடாக உள்ளது. புயல் மழை இல்லை, பருவ மழை இல்லை வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள தலைமுறை கண்டிராத வெள்ளம் மற்றும் சேதம் ஏற்பட்டது.

முப்படைகளை அனுப்பிப் போர்க் கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும். பெரு வெள்ளம் வரக் காரணம் என்னவென்றால் இயற்கை சீற்றங்கள் ஒரு பக்கம் மனித தவறு ஒரு பக்கம். மனித தவறு என்னவென்றால் தமிழ்நாட்டில்
ஆங்கிலேயர் நாட்டை விட்டுச் செல்லும்போது 39 ஆயிரத்து 800 ஏரி குளங்கள் கண்மாய்கள் இருந்த நிலையில் அதன்பின்னர் பொதுப்பணித்துறை பராமரிப்பிலிருந்து வந்தன.

தற்போது தமிழகத்தில் 7 ஆயிரம் ஏரி, குளங்கள் காணவில்லை. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் ஒரு குளத்தில் உள்ளது. திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் குளத்தில் கட்டப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தின் பேருந்து நிலையம்‌ மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் கண்மாயில் கட்டப்பட்டுள்ளது. ஆகவே ஏரிகளைக் குளங்கள் கண்மாய்களை அரசாங்கமே ஆக்கிரமிப்பு செய்துள்ளது. மக்களும் அவர்களுடைய பங்கிற்குத் தவறு செய்து உள்ளனர்.

ஏரி, காடு என்று சொல்கின்றனர் ஆனால் ஏரியைக் காணவில்லை. ஆகவே ஆளும் அரசும் வாழும் மக்களும் செய்த தவறுதான் இதற்குக் காரணம். இதனைத் திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகும். காவிரித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது. காவிரி சட்டப் போராட்டத்தில் தினசரி நதிநீர் பங்கீடு கிடைக்காததால் தற்போது தமிழகத்தின் உரிமை வருவதாகவும் தெரிவித்தார். மாதாந்திர நதிநீர் பங்கீடு என இருக்கும் வரை தமிழகம் கர்நாடகாவின் வடிகால் மாநிலமாகவே இருக்கும் என வேதனையுடன் தெரிவித்தார்.

2033 வரை காத்திடாமல் தமிழக அரசு காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் மற்றும் விவசாயச் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆலோசித்து காவிரி நடுவர் மையத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு தமிழக அரசு முன்னெடுக்காவிட்டால் தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு இதனை மேற்கொள்ளும்.

நடப்பு ஆண்டு குருவைச் சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களில் 13 லட்சம் ஏக்கருக்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேட்டூர் வடகரை, தென்கரை பகுதிக்கும் அதே போன்று கீழ்பவானிக்கும் தண்ணீர் இதுவரையிலும் திறக்கப்படவில்லை. கோடைக் காலத்தில் கொடிவேரி அணைக்காக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழக அரசு தவறு இழைத்து விட்டது. ஆற்றின் கரையோரங்களில் உள்ள சாயப்பட்டறைகள், தோல் தொழிற்சாலைகள் நலனுக்காகவே தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்குத் தவறு இழைத்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் பதவி விலகவேண்டும் என்றார்.

தமிழக அரசிடம் கள்ளுக்கு அனுமதி கோருவதும், கள்ளு கடைகளைத் திறக்க கூறுவதும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள்ளில் கலப்படத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியாத பட்சத்தில் ஆளுமை இல்லாத அரசாகவே உள்ளது என்றும், ஆட்சியிலிருந்து கீழே இறங்குங்கள் என்றார்.

வருகிற ஜனவரி 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். அவ்வாறு கள் இறக்கும் போராளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால் தமிழக அரசே முதல் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள் என்றார்.

அந்நிய நாடுகளிலிருந்து விவசாய விளைபொருட்களை மத்திய அரசு இறக்குமதி செய்து தமிழகத்தில் மற்றும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறது என்றும், மராட்டியத்தில் தற்போது விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய அரசு இதேபோன்று அயல்நாட்டிலிருந்து விவசாய மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி அதிகரித்தால் இது நாடு முழுவதும் எதிரொலிக்கும்” என வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களைத் திக்குமுக்காட வைத்த மழை! மீட்புப் பணி நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details