திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சுணன் - ஜான்சி தம்பதி. இவர்களின் மூன்றாவது மகள் சங்கீதா(24), திருச்சியிலுள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து முடித்தார். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட சங்கீதா, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு சேர்ந்து ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று சங்கீதா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக ஆசிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். பின்னர் உடற்கூறாய்வு செய்து அவரின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இறுதிச் சடங்குகள் மேற்கொண்டபோது, சங்கீதாவின் உடலில் காயங்கள் இருந்தது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மீண்டும் சங்கீதாவின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் பெங்களூருவிலுள்ள ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து சங்கீதாவின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவரால் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அப்போது சங்கீதாவின் உடலில் எந்தவிதமான உறுப்புகளும் இல்லை என்று மருத்துவர் தெரிவித்தைத் தொடர்ந்து, அதன் அறிக்கையும் ராம்நகர் காவல் துறையினர் வசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.