குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதோடு திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக இஸ்லாமியர்கள் இரவு பகலாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இஸ்லாமியர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தனர். அதைத் தொடர்ந்து திருச்சியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.