தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டா வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம்..! முசிறி மண்டல வட்டாட்சியர் கைது..! - லஞ்ச ஒழிப்புத்துறை

Musiri tahsildar arrest: பட்டா வழங்குவற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய முசிறி மண்டல வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு காவல்துறை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

Musiri Tahsildar arrested for accepting bribe to issue patta
பட்டா வழங்க லஞ்சம் பெற்ற முசிறி வட்டாட்சியர் கைது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 28, 2023, 1:16 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறியில் வசித்து வருபவர் கோபால் மகன் கிருஷ்ணன் (40). இவர் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். இவரின் தாயார் பெயரில் முசிறியில் சொந்தமாக ஒரு வீடும், ஒரு காலியிடமும் உள்ளது. இந்த நிலையில், இந்த இரண்டு இடங்களுக்கும் இதுவரை வருவாய்த் துறையிலிருந்து பட்டா பெறப்படவில்லை.

இதனால் கிருஷ்ணன் தனது தாயார் பெயரில் மேற்படி இரண்டு இடத்திற்கும் பட்டா பெறுவதற்காக, முசிறி வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023இல் பிப்ரவரி மாதம் மனு அளித்துள்ளார். ஆனால், தனது பட்டா சம்பந்தமாகக் கிருஷ்ணனுக்கு எந்த தகவலும் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப் பெறாததால், கிருஷ்ணன் முசிறி கிழக்குப் பகுதி வி.ஏ.ஓ அலுவலகம் சென்று, வி.ஏ.ஓ விஜயசேகரை சந்தித்து தனது மனுவின் நிலை குறித்துக் கேட்டுள்ளார்.

அதற்கு வி.ஏ.ஓ விஜயசேகர், கிருஷ்ணனின் இடத்தை மண்டல வட்டாட்சியர் வந்து பார்வையிட வேண்டும் எனக் கூறியுள்ளதாகத் தெரிகிறது. பின் நவம்பர் மாதத்தில் வி.ஏ.ஓ விஜயசேகர் முசிறி மண்டல வட்டாட்சியர் தங்கவேலை அழைத்துக் கொண்டு, கிருஷ்ணனின் இடத்தை பார்வையிட்டு விட்டு தாலுக்கா அலுவலகம் வருமாறு கூறிச் சென்றுள்ளனர்.

அதன் பேரில் கிருஷ்ணன் நேற்றைய முன்தினம் (டிச.26) மாலை 6 மணி அளவில், முசிறி வட்டாட்சியர் அலுவலகம் சென்று மண்டல வட்டாட்சியர் தங்கவேலைச் சந்தித்து தனது பட்டா குறித்துக் கேட்டுள்ளார். அப்போது மண்டல வட்டாட்சியர் தங்கவேல், கிருஷ்ணனின் இரண்டு இடத்திற்கும் பட்டா பெற்றுத் தருவது என்றால், ஒரு பட்டாவுக்கு ரூ.15 ஆயிரம் வீதம், இரண்டு பட்டாவுக்கும் முப்பதாயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமாறு கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிருஷ்ணன் தொகையைக் குறைத்துக் கூறுமாறு மண்டல வட்டாட்சியரிடம் கேட்டதன் பேரில், மண்டல வட்டாட்சியர் ரூ.5 ஆயிரம் குறைத்து, ரூ.25 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா பெற்றுத் தரமுடியும் என்று கறாராகக் கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேற்று (டிச.27) மாலை கிருஷ்ணனிடம் இருந்து மண்டல வட்டாட்சியர் தங்கவேல் லஞ்சப்பணம் ரூ.25 ஆயிரத்தைப் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான ஆய்வாளர்கள் சேவியர் ராணி, பிரசன்ன வெங்கடேஷ், பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், மண்டல வட்டாட்சியர் தங்கவேலை கையும் களவுமாகக் கைது செய்தனர்.

இதையும் படிங்க:22 வயதில் செய்த கொலைக்கு 54 வயதில் சிறை தண்டனை.. ஒடிசா சென்ற தமிழக தனிப்படையின் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details