திருச்சி:தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு காரை மறைத்து கருப்புக்கொடி காட்ட முயன்றதாக திருச்சி சிவாவின் ஆதரவாளர் 10 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் இல்லத்தில் நின்றுகொண்டிருந்த கார் கண்ணாடியை, உடைத்தும் இருசக்கர வாகனத்தை உடைத்தும் தகராறில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து காவல் நிலையத்தில் விசாரணைக்காக இருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை, காவல் நிலையத்திற்குள் புகுந்து அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட அமைச்சரின் ஆதரவாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்நிலையில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல் நடத்தியபோது பெண் காவலர் சாந்தி கொடுத்தப்புகாரின் பேரில், திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் 60-வது வார்டு கவுன்சிலருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும் 57-வது வார்டு கவுன்சிலருமான கிராப்பட்டி முத்து செல்வம், மாவட்டப் பொருளாளரும் அந்தநல்லூர் ஒன்றியத்தலைவருமான துரைராஜ், 55-வது வார்டு கவுன்சிலர் ராமதாஸ், பொன்நகர் பகுதி பிரதிநிதி திருப்பதி உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே,வெளிநாடு சென்றிருந்த திருச்சி எம்.பி. சிவா விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து நேரடியாக கன்டோன்மென்ட் பகுதியில் எஸ்.பி.ஐ காலனியில் அவரது இல்லத்திற்கு வந்து உடைக்கப்பட்ட கார் கண்ணாடி, இருசக்கர வாகனங்கள் என பார்வையிட்ட பிறகு அவரது ஆதரவாளர்களிடம் என்ன நடந்தது என கேட்டு தெரிந்து கொண்டார்.