திருச்சி: நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருநாவுக்கரசர் கூறியதாவது, "நான் கர்நாடகாவிற்குச் சென்று இருந்தபோது காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து அந்த மாநிலத்தின் துனை முதலமைச்சரிடம் பேசினேன். அதற்கு உதவி செய்யக்கோரிக் கேட்டபோது அவர், செய்கிறேன் எனத் தெரிவித்தார்.
ஆனால், காவிரி பிரச்சனை என்பது ஒருநாள் பிரச்சினை அல்ல, 50 ஆண்டுக்கால பிரச்சினை. இதற்கு கோரிக்கை வைத்தால் மட்டும் இந்த பிரச்சினை தீர்ந்துவிடாது. சட்ட ரீதியாக மாநில முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்றம் வரை பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்கக்கூடிய பிரச்சினை. இருந்தாலும் எனது தரப்பில் இருந்து கர்நாடக மாநில துனை முதலமைச்சரைப் பார்க்கும்போது எனது வேண்டுகோளை வைத்தேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து பாரத் என்று பெயர் மாற்ற முயற்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பாரத் என்று பெயர் மாற்றும் விவகாரத்தில் மோடி ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என தெரியவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது கூட பெயர் மாற்றலாமே? அதை நாங்கள் எதிர்த்தாலும் வெளிநடப்பு செய்தாலும் பல சட்டங்களைக் கொண்டு வந்தபடியே தான் இருக்கிறது பாஜக அரசு.
அதேபோல இந்த பெயர் மாற்றத்தை யார் எதிர்கின்றனர், யார் ஆதரிக்கின்றனர் என்பதை வாக்கெடுப்பு நடத்தி சட்ட ரீதியாக திருத்தம் கொண்டு வர வேண்டும். அதை ஒரு பலகையில் எழுதி வைத்து விட்டால் மட்டும் போதுமா? அரசியல் சட்டத்திலேயே இந்தியா, பாரத் என்று அழைக்கப்படலாம் என இருக்கிறது. எதையும் அவசரக்கோலத்தில் செய்யாமல் ஆலோசித்து முறையாகச் செய்ய வேண்டும். அநாவசிய குழப்பத்தைத் தரக்கூடாது" என்றார்.