திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, அயல்நாடுகளில் இருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணி இருவர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கிடைத்த அந்த ரகசிய தகவல் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் வரும் பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையின் போது விமானத்தில் வந்த பயணி 2 பேரின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இரு பயணிகள் தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதாவது அந்த பயணிகள் நூதன முறையில் அம்பு, செருப்பு, பேண்ட் பாக்கெட் மற்றும் கம்ப்யூட்டர் உதிரி பாகங்களில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.84 லட்சத்து 20 ஆயிரத்து 20 மதிப்புள்ள சுமார் 1 கிலோ 370 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியது. பின்னர் அந்த கடத்தல் தங்கங்களை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.