திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. திருநாவுக்கரசர், "மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு ஆலோசனைகள் மட்டுமே வழங்குகின்றன. மாநில அரசு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் வழங்கியுள்ளது. ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட் தாக்கல் செய்யும் தமிழ்நாடு அரசு, ஒரு ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாய் கொடுத்திருந்தால் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய்தான் செலவாகும். மது விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வருகிறது. மூன்று மாத ஊரடங்கிற்கு 1,000 ரூபாய் என்பது மிகவும் குறைவு.
அதேபோல் பிரதமர் மோடியின் உரையில் மக்களுக்கு எவ்வித பயனளிக்கும் அறிவிப்புகளோ, திட்டங்கள் எதுவுமில்லை. 20 லட்சம் கோடி ரூபாய்க்கு பொருளாதார வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நாட்டிலுள்ள மக்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு 5,000 ரூபாயை மத்திய அரசு வழங்கினால் மொத்தமே ஒரு லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும். தமிழ்நாட்டில் பலவீனமான அரசு இருப்பதுதான் இதற்கு காரணம். மோடிக்கு பயந்து செயல்படும் ஆட்சியாக எடப்பாடி அரசு உள்ளது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.