திருச்சி:பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்களுக்கு முதலில் குரல் கொடுப்பது பாஜக மகளிர் அணி மட்டும் தான். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான போராட்டங்களில் பாஜக மகளிர் அணி செயல்பட்டு வருகிறது” என்றார். இந்த செயற்குழு கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது. "நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, பாஜகவின் மகளிர் அணி சார்பில் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொள்ள இருக்கிறோம். இதில் மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு, மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி வருகின்றனர். இதற்கு ஆன்லைன் வகுப்புகளும் நடந்து வருகின்றது. தமிழகத்தில் இருந்த நல்ல எண்ணிக்கையில் இந்த ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதில் கலந்துகொள்பவருக்கு இ-சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து, இந்த திட்டத்தின் பயன்களை அவர்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்து கூற இருக்கிறோம். மேலும் பயனடைந்த பயனாளிகளுடன் செல்ஃபி எடுத்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்த இருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சிக் காலத்தில் தான், வருடம் தோறும் ஒரு கோடி ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பை வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்படாதவை. தேர்தல் வாக்குறுதிகளில் கூறப்பட்டதும் கூறப்படாததையும் பிரதமர் மோடி ஏழை மக்களுக்காக செய்து வருகிறார்.