திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீர், குப்பை, ஆகாயத்தாமரை ஆகியவற்றால் நீரோட்டம் பாதித்துள்ளது. கழிவுநீர் குட்டை போல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
'மேலசிந்தாமணி கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி தீவிரம்' எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ்!
திருச்சிராப்பள்ளி: மேலசிந்தாமணி பகுதியில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்தார்.
மழை காலம் வருவதற்குள் திருச்சி மாநகரில் உள்ள வாய்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கையை தொடர்ந்து திருச்சி கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் மாநகராட்சி மூலம் இந்த வாய்க்காலை தூர்வார வலியுறுத்தினார்.
இந்த வலியுறுத்தலின் பேரில் கோட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி, தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை இனிகோ இருதயராஜ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது வாய்க்கால் முழுவதையும் ஆழமாக தூர்வார மாநகராட்சி அலுவலர்களுக்கு, அவர் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது திமுக பகுதி செயலாளர்கள் மதிவாணன், மண்டி சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.