திருச்சி: நேற்று (07.03.2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி - சிறுகனூரில் தமிழ்நாட்டின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேரூரையாற்றினார். அதில், அவர் பேசியதாவது:-
"இது வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல; பேரழிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் தமிழ்நாட்டை காப்பாற்றி, முன்னேற்றப் பாதையை நோக்கி அழைத்துச் செல்வதற்கான தேர்தல். நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான என்னுடைய கனவுத் திட்டத்தை அறிவிக்கும் இடம்தான் தீரர்களின் கோட்டமாம் இந்தத் திருச்சி மாநகரம்!
தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் - எட்டுத் திக்கும் பரவியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மான மறவர்கள் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு முன்னால், நான் நிற்கும் போது என்னுடைய உள்ளம் பரவசம் அடைகிறது. பெருமை அடைகிறது. பெரிய நம்பிக்கைப் பிறக்கிறது.
ஐம்பெரும் முழக்கங்கள்:
சமூக சீர்திருத்தம், பொருளாதார சமதர்மம், மாநில உரிமைகள் போன்ற முற்போக்கான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே தி.மு.கழக கொள்கைகள் அமைந்துள்ளன. பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பின்னால், 1971-ஆம் ஆண்டு நம்மை வழிநடத்தும் கொள்கை என்ன என்பதை, நமக்கு அண்ணாவாய் மாறி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஐம்பெரும் முழக்கங்களாக வடித்துக் கொடுத்தார்!
- அண்ணா வழியில் அயராது உழைப்போம்!
- ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!
- இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
- வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!
- மாநிலத்தில் சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி!
அந்த முழக்கங்களை முதன்முதலாக வடித்துத் தந்த ஊரும், இந்த திருச்சி மாவட்டம் தான்!
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி கண்டது. அன்னைத் தமிழ் நிலத்துக்கு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயர் மாற்றப்பட்டு, ‘தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. இருமொழிக் கொள்கை வகுக்கப்பட்டது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் எனச் சட்டம் இயற்றப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து வாழ, சமத்துவபுரங்கள் கட்டப்பட்டன. பேருந்துகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இவையெல்லாம் தி.மு.கழகம் செய்தவற்றில் சிறு துளி தான். கடலளவு செய்துள்ள சாதனைகளை எடுத்துச் சொல்ல. அதற்கென்று தனி மாநாடே போட வேண்டும். மொத்தத்தில் ‘நவீன தமிழ்நாட்டை’ உருவாக்கியது தி.மு.க. ஆட்சி! தலைவர் கலைஞர் தலைமையிலிருந்த ஆட்சி!
இந்த அடிப்படைக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்த ஆட்சிதான், அ.தி.மு.க. ஆட்சி. ஊழலுக்கு அரசியல் வரலாற்றில் உதாரணமான ஆட்சியாக, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தது. இந்திய வரலாற்றில் மாபெரும் தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி விலகிய முதலமைச்சர் என்ற பெயரைப் பெற்றவர், அ.தி.மு.க. முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா!
அவரது மறைவு - அதில் மர்மம். அதற்குப் பின்னால், அவருடைய தோழி சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், முதலமைச்சர் பதவியைப் பெற்றார் பழனிசாமி. அதற்கு பின் பா.ஜ.க.வின் அடிமையாகி, சசிகலாவையும் ஏமாற்றி பழனிசாமியின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவி தந்து, பெயருக்கு வைத்துக் கொண்டார் பழனிசாமி. இப்படி கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை முழுமையாக நாசம் ஆக்கிவிட்டார்கள். மொத்தமாக உருக்குலைத்துவிட்டார்கள்.
இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2-ஆம் நாள் தமிழ்நாட்டின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது. இத்தகைய ஆட்சியை எப்படி கொண்டு செலுத்துவது என்பதற்காக, ஒரு தொலைநோக்குத் திட்டத்தை நான் வடிவமைத்துள்ளேன்.
இந்த உறுதிமொழிகளுக்கு ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்று பெயர் சூட்டி உள்ளேன்! இந்த இலக்குகள் - வளமான - ஏற்றத்தாழ்வற்ற தமிழ்நாட்டை உருவாக்கிடத் தேவையான 7 முக்கிய துறைகள் சார்ந்தது!
1. பொருளாதாரம்
* வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு!
- அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டுவது முதல் இலக்கு. இதனை நாம் சாதித்துவிட்டால், நமது பொருளாதாரம் ரூபாய் 35 லட்சம் கோடியைத் தாண்டும். இதன் விளைவாக, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 4 லட்சத்துக்கும் மேலாக உயரும். அந்த நிலையை நம்மால் நிச்சயம் எட்ட முடியும்.
- வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக் குறைப்போம்.
- பொருளாதார ரீதியாக நலிவடைந்து, கடும் வறுமையில் வாடும் 1 கோடி மக்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் மீட்கப் போகிறோம். இதன் மூலம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றப்போகிறது.
2. வேளாண்மை
* மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
- தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 லட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, இதனை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை பத்தாண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம்.
- தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு இருபோக நிலங்கள் உள்ளன. இதனை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவுள்ளோம்.
- உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழ்நாட்டை இடம்பிடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்த பத்தாண்டுகளில் செய்வோம்.