அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 50 ஆயிரம் தொழிலாளார்களுக்கு கடந்த 30ம் தேதி சென்னையில் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மற்றும் இதர 17 நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 2,202 தொழிலாளர்களுக்கு ரூ.34.87 லட்சம் மதிப்பிலான கல்வி , கண்ணாடி இயற்கை மரணம், விபத்து மரணம், ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று(ஆக்.5) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.
பின்னர் நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் முகாமினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கிளையின் சார்பாக கரோனா பெருந்தொற்று மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பில் 28 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டின், ஸ்டாலின்குமார், தியாகராஜன் பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் , அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:விசிகவுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள்ள நெருக்கத்தை பாஜக குறைக்க முயல்கிறது: விக்ரமன் குற்றச்சாட்டு