முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி திருச்சி:2022-2023 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா திருச்சி கலையரங்கத்தில் இன்று ஜூன் 17ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் தலைமை தாங்கினார்.
இதில் பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் செளந்தர பாண்டியன் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சரின் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான இந்த சிறப்பு திட்டம் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பெறும் வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து, தற்போது பொதுபிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகிய 5 வகை பிரிவினர்களுக்கும் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் தடகளம், கபாடி, இறகுபந்து, வாலிபால், சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கையுந்துபந்து, சிறப்பு கையுந்துபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், மேசைபந்து மற்றும் எறிபந்து ஆகிய போட்டிகள் 12.02.2023 முதல் 28.02.2023 வரை அண்ணா விளையாட்டரங்கம், ஜெ.ஜெ. பொறியியல் கல்லூரி மற்றும் ஜமால் முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதையும் படிங்க:biparjoy cyclone: குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களை நாசப்படுத்திய பைபர்ஜாய்
இந்த விளையாட்டு போட்டிகளில் 5 பிரிவுகளிலும் 3912 ஆண்கள் மற்றும் 1879 பெண்கள் என மொத்தம் 5791 நபர்கள் கலந்து கொண்டார்கள். மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் இணைந்து சான்றிதழ், பதக்கங்கள் மற்றும் பரிசு தொகையை வழங்கினார்கள்.
இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3000/-, இரண்டாம் பரிசு தலா ரூ.2000/- மற்றும் மூன்றாம் பரிசு தலா ரூ.1000/- மொத்தம் ரூ.41,18,000/- NEFT மூலம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் முழுமையாக பணிகள் முடிக்கப்படும்.
புதிய காவிரி பாலம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டுவதற்கும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் விரைவில் பணிகள் நடைபெறும்.
முதலமைச்சரின் கள ஆய்வுப் பணிகள் விரைவில் முழு வீச்சில் திருச்சி மாவட்டத்தில் நடைபெறும்” எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவையில் பாஜக மீது சீறிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகள்!