திருச்சி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி மரக்கடை பகுதியில் அமைந்து உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு உணவின் தரம் சரியாக இருக்கிறதா?, மாணவர்களுக்குச் சரியான அளவில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதைக் குறித்து ஆய்வு செய்தார்.
பின்பு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் உணவு முறைகளைப் பற்றிக் கேட்டு அறிந்தார். அவர்களிடம் குழந்தைகள் சாப்பிடும் உணவு ஆகையால் சுத்தமாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பின், பள்ளியின் கழிவறை சுகாதாரமான முறையில் உள்ளதா? என்பதைக் குறித்து ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டம் மற்றும் எந்த ஊருக்குச் சென்றாலும் முதலில் மாணவர்களுக்காக, தமிழ்நாடு முதல்வர் அறிவித்த காலை உணவுத் திட்டத்தைத் தான் ஆய்வு செய்வேன்.மேலும் எனக்குக் காலை உணவை, பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். என்ன தான் வீட்டில், வெளியில் சாப்பிட்டாலும் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது தான் எனக்குத் தனி மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
மேலும், மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிடும் போது அவர்களின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை, கல்வி முறை போன்றவற்றைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வேன். குறிப்பாக பள்ளிகளில் காலை உணவு சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா?, ஆசிரியர்கள் சரியான முறையில் கல்வி கற்று தருகிறார்களா? என்பதைக் குறித்து ஆய்வு செய்த பிறகு தான், நான் எனது பணியை தொடங்குவேன்” என்றுக் கூறினார்.