திருச்சிபொன்மலை ஜி கார்னரில் 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரையாற்றினார். அப்போது, “தமிழ்நாட்டில் குறுநில மன்னர்கள் போல திமுகவினர் செயல்படுகிறார்கள், இந்த ஊரில் ஓர் அமைச்சர் இருக்கிறார், நேரு அவரது பெயர் ஆனால் அவரின் சகோதரர் ராமஜெயம்தான் ராஜ்யம் நடத்துகிறார்.
எல்லாமே அவர் வைத்ததுதான் சட்டமாம் அவரை எம்.டி என்றுதான் அழைக்க வேண்டுமாம், இவர் என்ன தொழில் செய்கிறார் எந்த நிறுவனத்தில் எம்.டி. அதற்கான பொருளாதாரம் எப்படி வந்தது. நாம் வெற்றி பெற்றால்தான் இவர்கள் செய்த அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் நீங்கள் அதிமுகவை அரியணையில் அமரச் செய்வீர்களா... செய்வீர்களா...” என கர்ஜனையை முழக்கமாக வைத்து 2011ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தார்.
பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், நேருவின் மீதும், அவரின் சகோதரர் ராமஜெயம் மீதும் வழக்குமேல் வழக்குகளாக போடப்பட்டது. புள்ளம்பாடியில் இருந்த நாராயணா அரிசி ஆலைக்குள் புகுந்து இடித்து தள்ளினர். நேரு சிறைக்கு செல்ல ராமஜெயம் சிக்காமல் வழக்குகளில் முன் ஜாமின் மேல் முன் ஜாமினாக பெற, லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டது.
ஆற்றங்கரையில் ஒரு ஆண் சடலம்
வெளிநாடு சென்று கொச்சின் வழியாக திரும்பிய ராமஜெயம் கைது செய்யப்பட்டார். இதெல்லாம் வரலாறு.....
2012 மார்ச் மாதம் 29ஆம் தேதி திருச்சி திகிலில் உறைந்தது, அதிகாலை வாக்கிங் சென்ற ராமஜெயம் இதுவரை வீடு வந்து சேரவில்லை என அவரது மனைவி லதா தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, பரபரப்பு தொற்றிக்கொண்டது.
கட்சிக்காரர்கள் ஒரு பக்கம் சல்லடை போட்டு தேட காவல் துறையோ விக்கித்துப்போனது. ஏனென்றால் இவரிடம் கைகட்டி நிற்காத காவல் துறை அதிகாரிகளோ மற்ற அதிகாரிகளோ திருச்சியில் இருக்க வாய்ப்பில்லை என்ற நிலை, காலை 8 மணியளவில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தின் தொலைபேசியை எடுத்த ஏட்டையா பதறிப்போனார், கல்லணை செல்லும் வழியில் பொன்னுரங்கபுரம் அருகே பொன்னி டெல்டா என்ற குடியிருப்பு பகுதிக்கு எதிரே காவேரி ஆற்றங்கரையில் ஒரு ஆண் உடல் கிடைப்பதாக தகவல் சொன்னார்.
அங்கே காவலாளியாக வேலை பார்ப்பவர். நீ எங்கேயா அங்கே போன என கேட்க, காலைக்கடனை கழிக்க போனேன், பார்த்தேன், தகவல் சொன்னேன் என்றார். பணியில் இருந்த ஏட்டையா பீட் நம்பர் 47க்கு தகவல் சொல்ல, அங்கே சென்ற ஏட்டையா பதறிப்போனார். ஆம் அங்கே கை கால்கள் செல்லோ டேப்பாலும், கட்டுக்கம்பிகளாலும் கட்டப்பட்டதோடு வாயில் துணிவைத்து அடைத்து கிடந்தது உடல் கோரைப்புற்களை கொளுத்தியதால் முகம் கருப்பாகி கிடந்தது.
வழக்கில் முன்னேற்றல் இல்லை
உயரதிகாரிகளுக்கு தகவல் பறக்கவே சாரை சாரையாக சைரன் ஒலி ஒலிக்க காவல் துறை அதிகாரிகள் அணிவகுக்க தொடங்கினார்கள். அங்கே கிடந்த உடல் ராமஜெயத்தோடது தான் என சின்ன குழந்தைகூட சொல்லும். ஆனால் காவல் துறை அவருடைய மகன் வீநீத் நந்தனை வரவழைத்து அடையாளம் காட்ட சொன்ன பின்னரே உடலை ஆம்புலன்சில் ஏற்றினார்கள். விஷயம் காட்டுத்தீயாய் பரவ கட்சிக்காரர்களும் சாரை சாரையாக அண்ணல் காந்தி மருத்துவமனைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.
உள்ளூர் காவல் துறை கையைப்பிசையவே ஐந்திற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு பந்தாடப்பட்டனர். மூன்று மாதங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அதே வருடம் ஜூன் மாதம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றிருந்த நேரு மனதளவில் உடைந்து போனார். கலைஞரின் தேறுதல் வார்த்தைக்குப்பின் ஷேவ் செய்து தலைக்கு டை அடிக்க ஆரம்பித்து தன்னுடைய தம்பி சிலையை அவருடைய கனவுக்கோட்டையான கேர் கல்லூரி வளாகத்திலேயே நிறுவி திறப்புவிழா கண்டார்.
கொலைக்கு பல்வேறு காரணங்கள் பட்டியல் இடப்பட்டது. ஆனால், எதிலுமே முன்னேற்றம் இல்லை உறவினர்கள் ரெளடிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் இப்படி லிஸ்ட் எண்ணிக்கை எகிறிக்கொண்டே போனது. சிபிசிஐடி விசாரிக்கும் வழக்கில் ஐந்தாண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் ராமஜெயத்தின் மனைவி லதா மதுரை உயர்நீதிமன்ற கதவைத்தட்டி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோர வழக்கு ஐந்தாண்டுகள் கழித்து 2017ஆம் ஆண்டு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
கொலை வழக்கின் எண்டு கார்டு எப்போ?
சிபிஐ மட்டும் வானத்தில் இருந்து குதித்தாவந்தது என உள்ளூர் காவல் துறையினர் புலம்பியபடியே இருக்க சிபிஐ வசம் வந்தும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டது. முன்னேற்றமே இல்லை. ஆதலால் காவல்துறை அதிகாரிகள் சிபிஐக்கு உதவி செய்திட உத்தரவிடவேண்டும் என ராமஜெயத்தின் சசோதரர் ரவிச்சந்திரன் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிமன்றம் 2022ஆம் ஆண்டு பிப் 09ஆம் தேதியன்று ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில் தமிழ்நாடு அதிகாரிகளை சேர்க்க வேண்டும் என சொல்லப்பட அரசு அந்தக்குழுவில் எஸ்.பி. ஜெயச்சந்திரன், டிஎஸ்பி மதன் ஆகியோர் பெயர்களை மட்டுமே அறிவித்தது. இந்நிலையில், தற்போது சிறப்பு புலனாய்வு குழு (Sit) காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். விபரம் அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் தரப்படும் என்றதோடு தொடர்பு எண்களை அறிவித்தார். அடுத்தநாளே மேலும் நாற்பது பெயர்கள் எஸ்.ஐ.டி குழுவில் இணைக்கப்பட்டனர்.
இதன்பின் இவர்கள் தங்களோட யார் யாரையெல்லாம் சேர்த்துக்கொண்டு வழக்கை முடித்து எண்டு கார்டு போடுவார்கள் என்பதுதான் திருச்சி மட்டுமல்லாது தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ராமஜெயத்தின் படம் வைக்கப்பட்டு இன்று வரை பிறந்தநாள், மறைந்தநாளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதில் காலத்தால் அழியாத கலைஞர் அறிவாலயத்தை உருவாக்கியவர் என்கின்ற வாசகம் மின்னிக்கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க:கடந்த ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகித கப்பல்கள் - முதலமைச்சர் ஸ்டாலின்