திருச்சியில் விரைவில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படும் - அமைச்சர் நேரு தகவல் திருச்சி: திருச்சி மாநகர போக்குவரத்தில் தவிர்க்க முடியாத சாலையாக உள்ளது, கோட்டை ரயில்வே மேம்பாலம் ஆகும். திருச்சி மெயின் கார்டு கேட் (Main Guard Gate) பகுதியையும், தில்லைநகர், உறையூர், தென்னூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
திருச்சி - கரூர் ரயில்வே மார்க்கத்தின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 157 வருடப் பழமையான இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ரூ.34 கோடி ரூபாய் செலவில் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்குக் கடந்த 2022-23 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 50 சதவீதம் மாநகராட்சி, 50 சதவீதம் ரயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் ரூ.13.70 கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட உள்ள பறவைகள் பூங்காவிற்கான பணிகளையும் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டித் துவக்கி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவினைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என் நேரு, "திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும். உயர் மட்ட பாலம் அமைக்கலாம் என்று திட்டம் வகுத்தபோது ஏதும் இடையூறு இருக்கக் கூடாது என்பதால் தான் மெட்ரோ குறுக்கிட்டார்கள். தற்போது மெட்ரோ நிர்வாகம் அதற்கான தடையில்லா சான்றை வழங்கி விட்டது.
மேரிஸ் மேம்பாலத்தைப் பொறுத்த வரை ரயில்வே துறையின் பங்கும் இருப்பதால் அடுத்த மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும். பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார், உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "Subject is in a supreme court (வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது)" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சென்றார்.
இதையும் படிங்க:'பிசிக்ஸ் வாலா' கல்வி நிறுவனத்தில் திடீர் பணி நீக்கம் - காரணம் என்ன?