திருச்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் கே.என்.நேரு திருச்சி:தாரை தப்பட்டை, மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் என பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர் கே.என் நேரு சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார். தொடர்ந்து 3,000 பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு மற்றும் கலைஞரின் கடிதங்கள் என்ற புத்தகம் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து மண் பானைகளில் மஞ்சல் சுற்றி, பொங்கல் வைத்து, கரும்புகள், பனங்கிழங்குகள், வழைப்பழம், மேலும் அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளை சூரியனுக்கு படைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பொது மக்களுடன் இணைந்து இந்த பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினார்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் கும்மியடித்து உற்சாகமாக பொங்கல் கொண்டாடிய பழங்குடியின மக்கள்!
மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம், தாரை தப்பட்டை மற்றும் பேண்ட் வாத்தியங்கள் என அலுவலகம் முன்பு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்த அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.
முன்னதாக பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் கே.என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து 3,000 பேருக்கு வேட்டி, சேலை, கரும்பு மற்றும் “கலைஞரின் கடிதங்கள்” என்ற புத்தகமும் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தலைவா..தலைவா..என அலறவிட்ட கோஷம்! சிந்தனையிலும் வாழ்க்கையிலும் இதுதான் முக்கியம்..! - ரஜினிகாந்த பொங்கல் வாழ்த்து