திருச்சி: கலைஞர் அறிவாலயத்தில் திமுக விவசாய அணி மற்றும் விவசாயத் தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. திமுக விவசாய அணித் தலைவர் NKK பெரியசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் விவசாய அணி செயலாளர் AKS விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், விவசாயத் தொழிலாளர் அணி ஒருகினைப்பாளர் சிவா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட விவசாய அணியினர் கலந்து கொண்டனர். தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், "திமுக அரசு தான் விவசாயிகள் வாங்கிய வங்கிக் கடனை தள்ளுபடி செய்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வித போராட்டங்களும் செய்யாமல் விவசாயிகளுக்கு வேண்டிய உதவிகளை உள் நோக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். கடந்த ஆட்சிக் காலத்தில் வறட்சியாக இருந்தாலும், எந்த கழகமும் செய்யவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் நெருங்குகின்ற ஒரு சில மாதங்களுக்கு முன்பு வெற்று அறிவிப்பை அறிவித்துவிட்டுச் சென்றார்கள்.
அதற்கும் நிதி ஒதுக்கி முதலமைச்சர் விவசாயிகளைக் காப்பாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் விவசாயிகளை எந்த வித போராட்டமும் செய்யவிடாமல், விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து விவசாயிகளுக்கான அமைச்சராக தமிழக முதலமைச்சர் இருந்து வருகிறார்" என்று தெரிவித்தார்.
அதனை அடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு பத்து கோடி ரூபாய் என சாமியார் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "ஒரு தமிழக அமைச்சரைத் தனிநபர் ஒருவர் மிரட்டல் விடுத்தது கண்டனத்திற்குரியது. ஒரு சமுதாயம் சார்பாக அவர் மிரட்டல் விடுத்தது தண்டனைக்கு உரியது.
இது குறித்துச் சம்மந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை நீதிமன்றம் வாயிலாக எதிர்கொள்ளப்படும். இது போன்ற மிரட்டலுக்கு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு போதும் அஞ்சாது" என்று கூறினார். மேலும் சனாதனம் குறித்து உதயநிதி பேச்சுக்கு அரசு கலைக்கப்படும் என சுப்பிரமணியசாமி குறியது குறித்த கேள்விக்கு, "அதுதான் மிரட்டிக் கொண்டிருக்கிறார்களே, இதெல்லாம் வெறும் மிரட்டல்தான்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பானிபூரி கடை வைப்பதில் தகராறு.. வடமாநில தொழிலாளர்களிடையே மோதல்! கத்திக் குத்து சம்பவம்!