தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆவினில் பணியாளர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் - aavin controversy

ஆவினில் பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சனைக்கு வெகு விரைவில் தீர்வு காணப்படும் என திருச்சியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 14, 2023, 7:55 PM IST

அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

திருச்சி: திருச்சியில் ஆவின் குளிரூட்டு நிறுவனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நான்கு கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களுக்கு அனைத்து சீசனிலும் நியாயமான, நிலையான விலையில் கொள்முதல் செய்து பால் உற்பத்தியை பெருக்குவதிலும், வாடிக்கையாளர்களுக்கு தரமான பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களை ஆண்டு முழுவதும் விற்பனை செய்வதிலும் தலையாய கடமையாக கொண்டு ஆவின் செயல்பட்டு வருகிறது.

நல்ல கட்டமைப்புடன் செயல்பட்டு வரும் ஆவின் செயல்பாடுகளை கடந்த காலங்களில் பாராட்டியுள்ளனர். சமீப காலமாக பால் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், 27 லட்சம் லிட்டர் கொள்முதலில் இருந்து 30 லட்சம் லிட்டர் உயர்ந்திருப்பது என்பது தான் உண்மை. இதை அதிகரிக்கும் விதமாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். நானும் ஆவின் மேலாண்மை இயக்குனரும் பல மாவட்டங்களுக்கு சென்று பால் உற்பத்தியாளர்களை சந்தித்து, கடன் உதவிகளையும் மானிய திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வருங்காலத்தில் மிகப்பெரிய அளவில் ஆவின் கட்டமைக்கப்படும். ஆவின் நிர்வாகத்தில் உள்ள பணியாளர்கள் பகிர்ந்து அளிக்கப்பட்ட முறை பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். அத்தியாவசியமாக பணியாளர் தேவைப்படும் இடங்களுக்கு சில மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். பணியாளர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் பிரச்சனை வெகு விரைவில் சீரமைக்கப்படும்.

தனியார் பால் கொள்முதலுக்கு சிலர் உதவி இருக்கின்றனர். தனியார் பால் கொள்முதல் செய்பவர்கள் எவ்வித உரிமமும் பெறாமல் தரத்தையும் கடைபிடிக்காமல் செயல்படுகின்றனர். அதனால் பாலில் கலப்படம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல இடங்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் அமைப்புகளை தடை செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் கோரிக்கையை அரசுக்கு வைப்பதற்கு சகல உரிமையும் உள்ளது. அரசும் அந்த கோரிக்கைகளை கேட்டு தேவையான நடவடிக்கை எடுக்கும் மனநிலையில் அரசு உள்ளது. ஆவின் வாயிலாக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். முதல்வரிடம் உத்தரவை பெற்று விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

அம்பத்தூர், சோளிங்கநல்லூர், மாதவரம் பால் பண்ணைகளில் உள்ள பிரச்சனைகளுக்கு முற்றிலுமாக தீர்வு காணப்பட்டுள்ளது. ஆவினில் ஏற்படும் பிரச்சனைகளை நியாயப்படுத்தாமல் அதை முற்றிலும் தடுக்கும் வகையில் தான் அரசின் செயல்பாடு இருக்கும். சாமானிய மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் பொதுத்துறை நிறுவனம் ஆவின் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும்.

அரசு பால் கொள்முதல் பகுதிக்குள் வேற்று நபர் வரக்கூடாது அந்த மரபை கடைபிடிக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம். ஆண்டுதோறும் பால் உற்பத்தி செலவு அதிகரித்து வருகிறது இந்த ஆண்டு 10% பால் பொருட்கள் உற்பத்தியை அதிகரித்து, விற்பனையை பெருக்கி உள்ளோம். பால் தேவை அதிகரிக்கும் போது அதை சமாளிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பொது வெளியில் பேசுவதற்கு அச்சப்படும் அளவிற்கு எந்தவிதமான சவால்களும் இல்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: L Murugan: ஒரே ஆண்டில் 4.20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details