திருச்சி:தமிழ்நாட்டின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(மே 20)காலை 6.45 மணிக்கு திருச்சி பிராட்டியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள புங்கனூர் அரியாறு ஆற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து காலை 7.15 மணி அளவில் கருமண்டபம் பாலத்தில் இருந்து கோரையாற்றில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, அலுவலர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார்.
பின்னர் புத்தூர் நால் ரோடு வழியாகச் சென்று காலை 7.50 மணியளவில் வயலூரில் உள்ள உய்யகொண்டான் பாலத்தில் இருந்து குடமுருட்டி ஆற்றினைத் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் பாத்திமா நகர் வழியாகச் செல்லும் குடமுருட்டி ஆற்றில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
மீண்டும் காலை 8.15 மணியளவில் கம்பரசம்பேட்டை கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வுகளில், திருச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் மணிவாசகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் , மாநகராட்சி ஆணையர், கோட்டத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர்.