அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் ஆகியவை இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, பணி நியமன ஆணைகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “திருச்சி மாவட்டத்தில் இருக்கக் கூடிய மாற்றுத்திறனாளிக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 27 நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 19 நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த முகாமில் பதிவு செய்தவர்கள் 154 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
இதில் முதல் கட்டமாக 15 நபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான சான்றிதழ்களையும், மேலும் அவர்களுக்கு அலைபேசி, மூன்று சக்கர வாகனம் மற்றும் தையல் இயந்திரம் ஆகிய தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. 1,670 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது புதிய வகையான காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெளிவாகத் தெரிவித்துள்ளார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டால், காய்ச்சல் வீரியம் குறையும். மேலும் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே அதிமுக ஆட்சிக் காலத்தில், தற்போது தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலின் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதே போன்று எங்களைப் போன்ற முக்கிய நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் யாரும் ஆர்ப்பாட்டமோ அல்லது போராட்டமோ நடத்தவில்லை. நாங்கள் நீதிமன்றத்தை மட்டும்தான் அணுகினோம். எடப்பாடிக்குப் பேசத் தெரிந்தது அவ்வளவுதான். அவரது தரம் அவ்வளவுதான். அவர் அப்படித்தான் பேசுவார்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி தாக்குதல், செல்போன் பறிப்பு மற்றும் காயம் ஏற்படும் வகையில் கொடூர தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் மதுரை அவனியாபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் கலைஞர் கருணாநிதியின் மகன் என அடிக்கடி மேடையில் பேசி வருவதை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்ததி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரை விமான நிலைய விவகாரத்தில் ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு!