திருச்சி:தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு, ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தனது 34வது படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஷால், நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘விஷால் 34’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படப்பிடிப்பானது திருச்சி - சிதம்பரம் சாலை, லால்குடி அருகே சிறுமருதூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சென்றுள்ளார்.
இவ்வாறு அவரது சொந்த ஊரான லால்குடி காணக்கிளியநல்லூருக்குச் சென்று கொண்டிருந்த அமைச்சரைக் கண்டதும், படப்பிடிப்புக் குழுவினர் அமைச்சருக்கு வணக்கம் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்ட அமைச்சர் கே.என்.நேரு, தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்த்துள்ளார். பின், படக்குழுவினரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.