திருச்சி: மாநில நிதிக்குழுவில் இருந்து ரூ.5 கோடி செலவில் காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜன.6) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "10 ஆண்டு காலம் செய்ய முடியாததை, தற்போது மக்களின் வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றி உள்ளோம். நான் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகள் இருந்தபோது, எந்த திட்டமும் செயல்படுத்த முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் முன்னேற்றும் வகையில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கும் உடனடி அனுமதி வழங்கி வருகிறார்.
எனவேதான் புதிய சுத்திகரிப்பு நிலையத்துக்கும் அனுமதி வழங்கி, அது தற்போது திறந்து வைக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் நோக்கில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து அனைத்து வசதிகளுடன் கூடிய கழிவறைகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.