திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவ மாணவிகளுக்கான விடுதி கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வந்தார். அப்போது, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூர் அடுத்துள்ள திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்குச் சொந்தமான இடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள ராஜா காலனியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாணவர்களின் விடுதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் கயல்விழி செல்வராஜ், "தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தொடர்ந்து பள்ளிகளிலும், விடுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தற்போது கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான விடுதிகள் அதிகமாக தேவைப்படுகிறது. நான்கு மாவட்டங்களில், இந்த நிதியாண்டில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான விடுதிகள் கட்டப்படும் என அறிவித்திருந்தோம்.
மதுரை, கோவை, திருச்சி, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் விரைவில் விடுதிகள் கட்டப்படும். ஏற்கனவே மூன்று மாவட்டங்களில் விடுதிகளை ஆய்வு செய்து விட்டோம். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 350 மாணவர்கள் தங்கும் வகையில், 19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதிகள் கட்ட உள்ளோம். அதேபோல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜா காலனியில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியை 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 250க்கும் மேலான மாணவிகள் தங்கக் கூடிய வகையில் விடுதிகள் கட்டப்படும்.