திருச்சி : திமுகவின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் எம்ஜிஆர் (MGR). பின்னாளில் திமுகவில் இருந்து தனிக்கட்சி கண்டார். அதற்கான விதை திருச்சியில் தூவப்பட்டது என்றால் அது மிகையாகாது.
எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்க முதன்முதலாக திருச்சியில்தான் ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் தொடங்கின, திமுகவின் அதே நிறத்தோடு கூடிய கொடியின் நடுவிலே தாமரையைப்பொறித்த கொடியை ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தனர் எம்ஜிஆரின் தொண்டர்கள்.
இந்த ஆர்வம் திருச்சியில் பட்டொளி வீசிப்பறந்த புதிய கொடி போல தமிழகம் எங்கும் பரவியது. 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார் எம்ஜிஆர்., 1974ஆம் ஆண்டு தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டையும் திருச்சியில்தான் நடத்தினார்.
எம்ஜிஆர் அடிக்கடி கூறும் என் ரத்தத்தின் ரத்தங்களே என முழக்கத்தை திருச்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் இருந்துதான் தொடங்கினார். திருச்சியில் இருந்து முழக்கமிட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கே.சவுந்திரராஜன், ஆர். சவுந்திரராஜன், குழ.செல்லையா, பாப்பா சுந்தரம், முசிறி பித்தன் ஆகியோர், இவர்கள், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுடன் சத்துணவு திட்டத்தை தொடங்கிய எம்ஜிஆர் தனது அமைச்சரவையில் ஆர். சவுந்திரராஜனை அமர்த்தி அழகு பார்த்தார்.