செவ்வந்தியை ஆற்றில் கொட்டிய வியாபாரிகள் திருச்சி: காந்தி மார்க்கெட்டில் உள்ள பூ வியாபாரிகள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, சொந்த செலவில் வாங்கி வருகின்றனர். இங்கு, தினமும், 20 டன் செவ்வந்திப்பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. ஒருநாள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதால், வியாபாரிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்துவிடுவர்.
சீரான பருவமழை காரணமாக, செவ்வந்திப்பூக்கள் விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டுக்கு வரத்தும் அதிகரித்துள்ளது.
திருச்சி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த செவ்வந்திப் பூக்கள், கிலோ 10 ரூபாய்க்குக் கூட விற்பனையாகவில்லை. இதனால், பத்து டன்னுக்கும் அதிகமான பூக்கள் தேங்கி விட்டன.
தேக்கமடைந்த பூக்களை, இன்று வியாபாரிகள், மினி லாரிகளில் மூட்டை மூட்டையாக எடுத்துச்சென்று பகுதியில் சிறுகாம்பூர் அய்யன் ஆற்று வாய்க்காலில் கொட்டி அழித்தனர். இது குறித்து, பூ வியாபாரிகள் கூறியதாவது, “மழைக்காலத்தில், செடியிலேயே பூக்கள் அழுகி விடும். பாதிதான் அறுவடை செய்யப்படும். ஆனால், தற்போது, சீராக மழை பெய்வதால், பூக்கள் விளைச்சல் அதிகரித்து, வரத்தும் அதிகரித்து உள்ளது. சாதாரண நாள்களில், கிலோ 80 ரூபாய் வரை விற்கும் செவ்வந்திப்பூக்கள், கடந்த சில நாள்களாக, கிலோ 10 ரூபாய்க்கு கூட விற்கவில்லை. உரிய விலை கிடைக்காததால், திருச்சி மார்க்கெட்டுக்கு வந்த செவ்வந்திப்பூக்கள் தேங்கி விட்டன.
குப்பையில் கொட்டினாலும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால், ஆற்றில் கொட்டி அழித்து விடுகிறோம். விலை கிடைக்காமல் தேங்கிய பூக்களை, இப்பகுதியில் உள்ள ஆற்றில் கொட்டி விட்டோம். விளைச்சல் அதிகரித்து விலை இல்லாததால், விவசாயிகளுக்கும் நஷ்டம் தான்” என்றார்.
இதையும் படிங்க:மூதாட்டியின் நகை பறிப்பு; தப்பி ஓடும்போது விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்ட இளைஞர்கள்