திருச்சி மாநகருக்குள் காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணிவரை சரக்கு லாரிகள் வருவதற்கு காவல் துறை தடை விதித்துள்ளனர். அதேபோல் மாலை 4 மணிக்கு மேல் இரவு 9 மணிவரை சரக்கு வாகனங்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனால், தற்போது கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை லாரிகள் மாநகருக்குள் வர காவல் துறை தடை விதித்துள்ளது. இந்தத் தடையை அமல்படுத்துவதால் தங்களுக்கு தொழில் பாதிக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர்.
மேலும், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை போக்குவரத்து நெருக்கடி குறைவாக உள்ள நேரம் என்பதால், அப்போது லாரிகளை அனுமதிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல் துறைக்கும்-லாரி உரிமையாளர்களுக்கும் இடையேயான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.