நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஏற்கனவே நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவர்களின் சான்றிதழ்கள், கையெழுத்துகள், புகைப்படங்கள், கைரேகை, நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஆகியவற்றை மீண்டும் சரி பார்க்க மருத்துவ கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ் பயிலும் 150 மாணவர்களின் சான்றிதழ்கள், கையெழுத்து, புகைப்படம், கைரேகை உள்ளிட்டவற்றை கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) அர்ஷத் வேகம் தலைமையில் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர் அடங்கிய குழு இன்று காலை முதல் மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பொறுப்பு அர்ஷத் பேகம் கூறுகையில்,
"மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின்படி தற்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மாணவ மாணவிகளின் சேர்க்கையின்போது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தேனியில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை எந்த ஆள்மாறாட்டம் நடந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து அடுத்த சில நாட்களில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சான்றிதழ்களையும் சரி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பின் இறுதி அறிக்கை மருத்துவக்கல்வி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கப்படும்" எனக் கூறினார்.
திருச்சியில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது