மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக ஆளுநரை விமர்சித்துள்ளார் திருச்சி: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "மதிமுக அமைப்பு தேர்தல் 80 சதவிதத்திற்கு மேல் முடிந்துவிட்டது. மதிமுக கழகம் புதுவேர் கொண்டு ஊக்கமும், வடிவமும் கொண்டு வளர்ந்து வருகிறது. இதுவரை அமைப்புகள் இல்லாத இடத்திலும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதிமுகவில் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத துர்பாக்கியம், சாபக்கேடு இப்போது இருக்கக்கூடிய ஆளுநரான ஆர்.என்.ரவி தான். அவர் தனக்கு இல்லாத அதிகாரங்களை தானே எடுத்துக்கொண்டு, அவரே ஆட்சி நடத்துவது போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஸ்டாலின் நடத்திக் கொண்டிருக்கின்ற போது, இந்தியாவிற்கே வழிகாட்டுகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று எல்லோரும் பாராட்டுகின்ற நேரத்தில் அவர் குறுக்கே புகுந்து உளறிக் கொட்டிக் கொண்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுநரின் எந்த வார்த்தையும் ஏற்றுக்கொள்ள இயலாதது ஆகும். அவர் ஒன்று ராஜினாமா செய்து விட்டுப் போக வேண்டும். இந்துத்துவாவின் உடைய ஏஜெண்டாக இருக்க வேண்டும் என்றால் அதில் இருந்தே அவர் வேலை செய்யலாம். அவரை நீக்க வேண்டும், அல்லது அவராக ராஜினாமா செய்துவிட்டு போக வேண்டும்.
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட தமிழக முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து, தமிழகத்திற்கு எது நல்லதோ அதை செய்து வருகிறார். அனைத்து துறைகளிலும் முதலிடத்தை தமிழகம் பெற்றிருக்கிறது இந்தியாவிலேயே. அப்படிப்பட்ட நல்ல ஆட்சியை, திராவிட மாடல் ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் நந்தினியை போல மதிப்பெண் பெற வேண்டும் என்கிற எண்ணம் பெண் பிள்ளைகளுக்கும், பையன்களுக்கும் ஏற்பட்டு இருக்கின்றது.
தமிழ்நாடு இந்த இரண்டு ஆண்டுகளில் பெற்ற சிறப்பை விட வருங்காலத்தில் இன்னும் அதிகமான சிறப்பை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆளுநர் ஆளுநராக நடந்து கொள்ளவில்லை. அவர் ஒரு பாஜக கட்சியின் ஏஜெண்டாக நடந்து கொள்கிறார். இதுமாதிரியான நிலைமை இதுவரையில் தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை.தான்தோன்றித்தனமான போக்கு ஆளுநரின் போக்கு. அவர் நீடிப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது அல்ல” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: TN Cabinet Reshuffle: பிடிஆர் உள்ளிட்ட 4 அமைச்சர்களுக்கு இலாக்கா மாற்றம்.. யார் யாருக்கு எந்த துறை?