பட்டியலினத்தில் உள்ள ஐந்து சமுதாயத்தினரை பொதுப்பட்டியலில் சேர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க அவர் பரிந்துரை செய்திருந்தார். முதலமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வஉசி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்திலும், ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில் இன்று (டிச.09) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே வஉசி பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயர்சித்தனர். ஆனால் அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்தனர்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் மல்லுக்கட்டி வாகனத்தில் ஏற்றினர்.