கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடமாநிலங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சுமார் 500 பேர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பணி அமர்த்தப்பட்டனர்.
இது ரயில்வே ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வட மாநிலத்தவர்கள் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. தற்போது, ஊரடங்கு சமயத்தில் ரயில்வே அலுவலர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணி நியமனம் செய்ததற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, தெற்கு ரயில்வே பணிகளில் தமிழ்நாடு இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தெற்கு ரயில்வே பணிமனையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, கருப்புக் கொடியுடன் பேரணியாக வந்து திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பொன்மலை பணிமனை முன்பு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.