திருச்சி: திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து நாடு முழுவதும் பரவி பெரும் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவரின் கருத்துக்கு பல்வேறு கட்சியினரும், இந்து அமைப்புகளும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (செப்.6) ஸ்ரீரங்கத்திற்கு வந்த மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் இதுகுறித்து கூறுகையில், “அரசாங்கத்தில் அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் சனாதனத்துக்கும், சனாதன தர்மத்துக்கும் விரோதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார். ஜாதி, மத வேறுபாடு இன்றி செயல்பட வேண்டிய அமைச்சர் ஒரு தர்மத்துக்கு விரோதமாகப் பேசுகிறார்.
அந்த அமைச்சரும், அரசும் நமக்குத் தேவையா? என்ற கேள்வி எழுகிறது. சனாதன தர்மத்தைப் பற்றி பேசும் உதயநிதிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தினரிடம் அந்த மதங்களில் தவறுகள் இருந்தால், அதை சுட்டிக்காட்டி, சரி செய்யுங்கள் என்று கூற தைரியம் இருக்கிறதா? சனாதன தர்மத்தைப் பற்றி பேசுபவர்கள், மழை காலத்தில் பறக்கும் ஈசலைப் போன்றவர்கள். ஈசலை எறும்புகள் அடித்துச் செல்வது போல், அந்த கும்பலும் அடித்துச் செல்லப்படுவார்கள்.
இவர்களைப் போன்றவர் நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். நாட்டில் உள்ள 125 கோடி மக்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்கள் தான். சிறுபான்மை மக்களைத் தவிர்த்து, 91 சதவீதம் உள்ள இந்து தர்மிகளைப் பற்றிப் பேசுவர்கள் இந்த நாட்டில் இருக்கக் கூடாது, இருக்க விடவும் கூடாது. தர்மத்துக்காகப் பாடுபட்டவர்கள் சிலர், தர்மத்தின் பேரைச் சொல்லி சம்பாதிப்பவர்கள் சிலர். இவர்கள் தர்மத்தின் பேரைச் சொல்லி சம்பாதிக்கின்றனர்.
ராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அனைவரையும் ஆலய பிரவேஷம், கோவில் பூஜை போன்றவற்றில் பங்கேற்க வைத்துள்ளார். நம்மாழ்வார் சன்னதிகளில், பிராமணர் அல்லாத சிறுபான்மை என்று சொல்லக்கூடிய சமூகத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். அரசாங்கமும், அரசாங்கத்தில் இருப்பவர்களும், ஜாதி, மதம் பற்றி பேசக் கூடாது.