தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிரைப் பணயம் வைத்து மகளை மீட்ட தந்தை! - திருச்சி அருகே பரபரப்பு!

திருச்சி: மணப்பாறை அருகே உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து மகளைக் காப்பாற்றிய தந்தைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

kidnappers

By

Published : Sep 19, 2019, 8:03 AM IST

Updated : Sep 20, 2019, 7:26 PM IST

மணப்பாறை அடுத்த நடுப்பட்டியைச் சேர்ந்தவர் கணபதி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் இவர், நேற்று இரவு தனது மகள் கார்த்திகாவோடு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, அவ்வழியே காரில் வந்த இளைஞர்கள் சிலர் கணபதியிடம் விலாசம் கேட்பதுபோல் நடித்து கணபதியைத் தள்ளிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் கார்த்திகாவை காருக்குள் இழுத்துப்போட்டுத் தப்ப முயன்றுள்ளனர்.

இதற்குள் சுதாரித்து எழுந்த கணபதி, காரில் தொற்றிக் கொண்டே சுமார் 3 கி.மீட்டர் தூரம் கூச்சல் போட்டபடியே சென்றுள்ளார். இந்தத் தகவல் காட்டுத் தீ போல் பரவியதையடுத்து, கல்லுப்பட்டியில் சாலையின் குறுக்கே மரங்களைப் போட்டு மறிக்க பொதுமக்கள் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால், அவர்கள் காரை நிறுத்தாமல் சென்றதால் தங்கம்மாபட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் கீரனூர் பிரிவில் காரை மடக்கியுள்ளனர். இதனால், காரில் வந்தவர்கள் கார்த்திகாவையும் கணபதியையும் விட்டுவிட்டு அருகில் உள்ள மலைப்பகுதிக்குள் ஓடி தலைமறைவாக முயன்றனர்.

அந்த இளைஞர்களைத் துரத்திப் பிடித்த பொதுமக்கள், அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இளைஞர்கள் வந்த மாருதி வேனை ஆத்திரம் தீர அடித்து நொறுக்கி, குப்புறக் கவிழ்த்தனர்.

இதனையடுத்து, அவர்களோடு வந்த மேலும் சிலரைக் கைது செய்யக்கோரி திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உயிரைப் பணையம் வைத்து மகளை மீட்ட தந்தை பா

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட துணை கண்காணிப்பாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

காயமடைந்த கார்த்திகா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், கடத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனது உயிரையும் பொருட்படுத்தாது மகளைக் காப்பாற்றப் போராடிய கணபதியைப் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Last Updated : Sep 20, 2019, 7:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details