திருச்சி:மணப்பாறை அருகேயுள்ள பொத்தமேட்டுபட்டியைச் சேர்ந்தவர் பாத்திமா சகாயராஜ் (52). இவர் நகர நிலவரி தனி வட்டாட்சியராக பணியாற்றி வருகிறார். இவரிடம் மணப்பாறை எடத்தெருவைச் சேர்ந்த திமுக நகர பொருளாளர் கோபி (51), அவரது நிலத்தின் சர்வே எண் சம்பந்தமாக விளக்கம் கேட்டறிந்துள்ளார்.
கைகலப்பாக மாறிய சண்டை
இதையடுத்து அவரது நிலத்திற்கு அருகில் உள்ள நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன என்ற விவரத்தையும் கோபி கேட்டுள்ளார். ஆனால் இந்த விவரங்களை தனி வட்டாட்சியர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
முதலில் வாய்த் தகராறாக தொடங்கிய சண்டை, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் திமுக நகரப் பொருளாளர் கோபி, தனி வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜை கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... இதனைத் தொடர்ந்து தாக்கப்பட்ட தனி வட்டாட்சியர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
திமுக பிரமுகர் மீது வழக்கு
இந்நிலையில், முன்னதாக திமுக பிரமுகர் மீது வருவாய்த் துறையினர் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி மணப்பாறை வருவாய்துறை ஊழியர்கள் அலுவலகப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனி வட்டாட்சியரைத் தாக்கிய திமுக பிரமுகர் மீது மணப்பாறை காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக பிரமுகர் கோபியை நேரில் விசாரணை மேற்கொண்ட மணப்பாறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் தங்கியிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை... தறி பட்டறை ஊழியருக்கு 20 ஆண்டுகள் சிறை!