திருச்சி, மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி காப்புகட்டுதலுடன் துவங்கியது.திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியாக வேப்பிலை மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா வரும் வேடபரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலர் வீரமணி தலைமையில் காட்டு முனியப்பன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க படுகளம் புறப்பட்டு வேப்பிலை மாரியம்மன் கோவில் வந்தடைந்து,அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் வேப்பிலை மாரியம்மன் சூலாயும் ஏந்தி அமர்ந்திருக்க மணப்பாறை பட்டி கிராமத்தினர் வாகனத்தை ராஜ வீதிகளின் வழியாக சுமந்து சென்று வேடபரி மீண்டும் கோவிலை வந்தடைந்தது. அப்போது வழி முழுவதும் குதிரை வாகனம் மீது பூக்களை தூவி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.