திருச்சி:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த மீனவேலி ஊராட்சி மன்றத் தலைவருடைய மகன் வினோத். இவர் தன்னுடைய நண்பர் சாமிதுரை என்பவருக்கு கடனாக அளித்திருந்த ரூ.5.50 லட்சத்தை திரும்பப் பெறுவதற்காக மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் சாமிதுரையை அழைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் இன்று (பிப்.10) சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு சாமிதுரை வங்கிக்கணக்கில் இருந்த ஐந்தரை லட்சத்தை ரொக்கமாக பெற்றுக்கொண்ட வினோத், பணத்தை கையில் வைத்துக்கொண்டு வங்கியின் அருகில் இருந்த டீ கடையில் அவருடன் இணைந்து டீ அருந்தியுள்ளார்.
பின்னர் பணத்தை ஒரு பாலித்தீன் பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு அருகில் மதுரை சாலையில் உள்ள தனது மற்றொரு நண்பரின் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு பணத்தை வைப்பதற்கு மற்றொரு துணிப்பையை பெற கடைக்குள் சென்றுள்ளார். இதனிடையே அவர்களுக்குப் பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வினோத்தின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.