பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதன்படி இன்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு நடைபெற்றுவருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்த ஊரடங்கு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில் திருச்சியில் அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டுள்ளன. இதனால் திருச்சி மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை ஏற்றிவரும் விமானங்கள் வந்து செல்கிறது.
இந்த வகையில் இன்று காலை சிங்கப்பூரில் இருந்து 163 பயணிகளும், சார்ஜாவில் இருந்து 136 பயணிகளும், துபாயில் இருந்து 86 பயணிகளும் திருச்சி வந்தனர். இதில் மொத்தம் 385 பயணிகளுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. அதில் 12 பெண்கள் உட்பட 22 பேருக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தது.